குழப்பமான முடிவில் அண்ணா பல்கலை :
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நவம்பர் / டிசம்பர் தேர்வுகளை விருப்பமுள்ள முதலாமாண்டு மாணவர்கள் இப்போதே எழுதவும், மற்றவர்கள் ஏப்ரல் தேர்வுடன் சேர்த்து எழுதவும் அனுமதி அளித்திருக்கிறது. இப்போது எழுதாமல் ஏப்ரலில் எழுதும்போது அந்த தேர்வுகள் “அரியராக” கணக்கிடப்படாது எனவும், மீண்டும் அந்த தேர்வுகளுக்கு தேர்வு கட்டணம் கட்ட தேவையில்லை எனவும் அண்ணா பல்கலை பதிவாளர் அறிவித்திருக்கிறார்.
இதனால், தற்போதைய மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, நாகை போன்ற பிற மாவட்ட மாணவர்களின் பாதிப்பை அண்ணா பல்கலை கணக்கில் கொண்டதாக தெரியவில்லை.
மேலும், பாதிபேருக்கு இப்போதும், மீதி பேருக்கும் ஏப்ரலிலும் தேர்வு நடத்துவது தேவையில்லாத நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக தேர்வு அட்டவணை தயாரிப்பில் பெரிய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இப்போது தேர்வெழுதி அரியர் வைக்கும் மாணவர்களுக்கும், புதியதாக ஏப்ரலில் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாளா? என்பதிலும் குழப்பமே மிஞ்சும்.
இதற்கு பதிலாக, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டுக்கான தேர்வை பருவமுறையில்லா ஆண்டுத்தேர்வாக (NON SEMESTER) அறிவித்து எல்லா தேர்வுகளையும் மாநிலம் முழுவதுக்குமான மாணவர்களுக்கும் ஏப்ரலிலேயே வைத்துவிடலாமே!?
இதன் மூலம் மாவட்டங்களுக்குள் பாகுபாடு ஏற்படாமல் தடுப்பதுடன், தேர்வு அட்டவணை தயாரிப்பிலும் குழப்பம் தவிர்க்கலாம்.
குறிப்பு : மனப்பாடம் செய்வதை மட்டுமே ஊக்குவிக்கும் நம் கல்வி முறையில், இப்போது படித்த பாடங்களை, ஏப்ரல் வரை நினைவில் வைத்து (அடுத்த செமஸ்டர் பாடங்களையும் படித்த பின்னர்) ஏப்ரலில் எழுதி தேர்ச்சி அடைவதும், அதிக மதிப்பெண் எடுப்பதும் கடினம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.