2015-16 கல்வியாண்டில் 588 தொழில்நுட்ப கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன் சில் அனுமதி மறுத்துள்ளது. அடிப்படை வசதியின்மை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக்மேலாண்மை படிப்புகள், பார்மசி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம்ஆண்டுதோறும் அனுமதி பெறவேண்டும்.
இதன்படி வரும் 2015-16ம் கல்வியாண்டிற்கு புதிய மற்றும் ஏற்கனவே உள்ள பல தொழில் நுட்ப பாடப்பிரிவுகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது. அடிப்படை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, குறைந்த தேர்ச்சி விகிதம், குறைந்த வகுப்பறைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா முழுவதும் 588 கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 7 கல்லூரிகள் உள்பட தமிழகம் முழுவதும் 31 கல்லூரிகள் இதில் அடங்குகின்றன.
இதுகுறித்து ஏஐசிடிஇ அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவில் புதிதாக தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கும்போதும் ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் புதுபாட பிரிவுகள் ஆரம்பிக்கும் போதும், குறிப்பிட்ட சில காலங்களுக்கு பிறகு ஏற்கனவே இருக்கும் படிப்புகளுக்கும் மறு அனுமதி கோரி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும். இதையடுத்து அனுமதி கோரும் கல்லூரிகள் அல்லது நிறுவனங்களுக்கு செல்லும் ஏஐசிடிஇ குழுவினர், கல்லூரியை முழு ஆய்வு செய்து அதன் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்கள் வசதிகளை கருத்தில் கொண்டு திருப்தியளிக்காத பட்சத்தில் அந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
அந்த வகையில் 2015-16 கல்வியாண்டில் இந்தியா முழுவதுமிருந்து அனுமதி கோரிய 588 தொழில்நுட்ப கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள் இந்தாண்டு குறிப்பிட்ட அந்த பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அடிப்படை வசதிகளை அவர்கள் பூர்த்தி செய்தால், மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது குறித்து ஏஐசிடிஇ கவுன்சில் முடிவு செய்யும். இந்தியா முழுவதும் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள 588 பொறியியல் கல்லூரிகளில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 107 கல்லூரிகளும், மகாராஷ்டிராவில் 88 கல்லூரிகளும், சென்னையில் 7 உள்பட தமிழகத்தில் 31 கல்லூரிகளும் அடங்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி: தமிழ்முரசு